ஈறுகளில் இரத்தக் கசிவு என்றால் என்ன?
ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு ஆரோக்கியமற்ற அல்லது நோயுற்ற ஈறுகளுக்கான அறிகுறி. இதற்கான காரணங்களை சரிசெய்வது, பற்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை சமாளிப்பதற்கான முக்கிய வழிகளாகும்.
இதற்கான முக்கிய அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் என்ன?
ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதற்கு முன்னால் ஈறுகள் வீங்கி இருக்கும் (சிவத்தல் மற்றும் வீக்கம்) மற்றும் பற்கள் துலக்கும் போதோ அல்லது பல் இடுக்கை சுத்தம் செய்யும் போதோ (பல் ஈறு வீக்கம்) இரத்தக் கசிவு ஏற்படலாம். வீக்கம் கடுமையாகும் போதும் அது கீழ் தாடை எலும்புகள் வரை செல்லும்போதும் (பற்புறத் திசு நோய்) இரத்தக் கசிவு அதிகமாகலாம்.நோய் வளர்ச்சியடையும் போது பின்வரும் பல அறிகுறிகளைக் காணலாம்:
- வாய் துர்நாற்றம்.
- உணவை மெல்லும்போது கடினமாக இருத்தல் மற்றும் வலி.
- பற்கள் ஈறைத் தள்ளிக் கொண்டு வெளியே தெரிதல்.
- பற்கள் கூச்சம் அதிகமாவதுடன் சேர்ந்து பற்கள் தளர்ந்து போதல்.
- ஈறில் சீழ் படிதல்.
- நோய்த் தொற்று அதிகமாகும்போது வாயில் உலோகச் சுவை ஏற்படுதல், அதிகமாக எச்சில் சுரத்தல் மற்றும் காய்ச்சல் ஏற்படுதல்.
ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன?
ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள்:
- தவறான முறையில் பல் துலக்குதல் மற்றும் பல் இடுக்கை சுத்தம் செய்தல் அல்லது கடினமான பற்குச்சியை உபயோகப்படுத்துதல்.
- பற்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளாமல் இருத்தல்.
- ஈறுகள் மற்றும் பற்கள் சந்திக்கும் இடங்களில் பிளேக் உருவாவதினால் நோய்தொற்று ஏற்படுதல்.
- பிரசவ காலத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்.
- வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு.
- இரத்தப்போக்கு சீர்கேடுகள்.
- இரத்தம் உறையாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் மாத்திரைகள் (இரத்த மெலிவூட்டி மருந்துகள்).
- இரத்த வெள்ளையணுப் புற்றுநோய் (லுக்கீமியா) போன்ற ரத்த புற்றுநோய்.
- ஒழுங்கில்லாத பொய்ப்பற்கள்.
- நீரிழிவு நோய்.
- புகை பிடித்தல்.
- எயிட்ஸ் போன்ற நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த சூழ்நிலைகள்.
இதை எப்படி கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது?
பல் மருத்துவர் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை பற்களை சோதனை செய்வதன் மூலமும் அதைச் சார்ந்த அடையாளங்கள் மற்றும் நோயாளிக்கு இருக்கும் மற்ற நோய்களுக்கான (நீரிழிவு நோய் போன்ற) மருத்துவ ஆய்வை வைத்தும் கண்டறிவர். இதைக் கண்டறிய உதவக்கூடிய பல்வேறு சோதனைகள்:
- இரத்தப் பரிசோதனை.
- முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை உடலில் ஏதேனும் நோய்தொற்று உள்ளதா என கண்டறிய உதவும்.
- ஆராய்ச்சிகளின் படி அதிக ரத்தக் கொழுப்பு அளவு மற்றும் அதிக சி-எதிர்வினைப் புரத அளவு ஈறுகள் மற்றும் பற்களில் உண்டாகும் பிரச்சனைகளோடு தொடர்புடையது.
- எக்ஸ்-கதிர்: கீழ் தாடை எலும்பை எக்ஸ்-கதிர்கள் மூலம் ஆய்வு செய்வதனால் ஈறுகளில் உள்ள பிரச்சனை எந்த அளவிற்கு கீழ் தாடை எலும்பை பாதித்துள்ளது என்பதை கண்டறியலாம்.
ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவிற்கான சிகிச்சையானது நோய் மேலும் பரவாமல் நிறுத்துவதையும் பற்கள் மற்றும் ஈறுகள் மேலும் பாதிப்படையாமல் தடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
- சரியான முறையில் பற்களை துலக்குவது மற்றும் பல் இடுக்கை சுத்தம் செய்வது பிளேக்கை குறைக்க உதவும்.
- நுண்ணுயிர்கொல்லிகள் (ஆண்டிபையோட்டிக்ஸ்) நோய்த் தொற்றில் இருந்து வெளிவர உதவும்.
- சுடுதண்ணீர் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடை வாய் கொப்பளிக்க பயன்படுத்துவது பிளேக்கை குறைக்க உதவும்.
- பல் மருத்துவர் பல் தூய்மிப்பு (ஸ்கேலிங்) முறையின் மூலம் பற்களை சுற்றியுள்ள பிளேக்கை அகற்றுவார்.
- வைட்டமின் சேர்க்கை மூலம் வைட்டமின் சி அல்லது வைட்டமின் கே குறைபாட்டால் ஏற்படும் ரத்தக்கசிவை சரி செய்யலாம்.
- புகைப்பிடிப்பது மற்றும் புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- ஆஸ்பிரின் போன்ற ரத்தம் உறையாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் மாத்திரைகளை (இரத்த மெலிவூட்டி மருந்துகள்) மருத்துவர்கள் பரிந்துரைத்தாலேயன்றி முற்றிலும் தவிர்க்கவும்.
- பற்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு முறையான பல் பரிசோதனை மேற்கொள்ளலாம் மற்றும் வல்லுனர்கள் மூலம் பற்களை சுத்தம் செய்யலாம்.