குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) என்றால் என்ன?
ஒற்றைத் தலைவலி என்பது பெரியவர்களுக்கு மட்டும்தான் வருமென்று நாம் பெரும்பாலும் நம்பிக்கொண்டிருக்கிறோம் ஆனால் குழந்தைகளும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். உண்மையை சொல்வதென்றால் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளில் 5 சதவீதம் பேர் ஒற்றைத் தலைவலி இருப்பதாக முறையிடுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. ஒற்றைத் தலைவலி என்பது அடிக்கடி ஏற்படும் கடுமையான தலைவலி ஆகும். இதனுடன் சேர்ந்து வரும் பல்வேறு அம்சங்கள் வேறு இருந்தாலும் தலைவலிதான் மிக கடுமையாகவும் பொதுவாகவும் உணரப்படும் அறிகுறியாகும்.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன?
இதன் குணாதிசயமான தலைவலியை தவிர்த்து ஒற்றைத் தலைவலி உள்ள குழந்தைகள் வேறு அறிகுறிகளையும் உணரக்கூடும். அவை பின்வருமாறு:
- குமட்டல் மற்றும் வயிற்று பிடிப்புகள்.
- வெளிச்சம், ஓசை மற்றும் வாசனை ஆகியவற்றிற்கு உணர்திறன்.
- அயர்ச்சி.
- கண்களுக்கு கீழ் கருவளையங்களுடன் வெளுத்துப்போய் இருப்பது.
- மிக அதிகமான வியர்வை மற்றும் தாகம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இதன் பொதுவான காரணங்களை சொல்வதோ அல்லது இது எதனால் உண்டாகிறது என மிகச்சரியாக சொல்வதோ கடினம். சில பொதுவான காரணங்களில் கீழ்வருபவையும் அடங்கலாம்:
- மூளையில் செரோடோனின் என்ற இரசாயனத்தின் குறைபாடு.
- மது.
- மோனோசோடியம் குளூட்டமேட் (எம்.எஸ்.ஜி) உடைய உணவுகள்.
- சர்க்கரை மற்றும் காஃபின்/காபி அல்கலாய்டு.
- கொட்டைகள் மற்றும் மட்டி.
- குறிப்பிட்ட பால் பொருட்கள்.
- மனஅழுத்தம், பதட்டம்.
- உணவு, நீரேற்றம் அல்லது உறக்கம் பற்றாக்குறை.
- பிரகாசமான விளக்குகள்.
- கணினியில் நீண்ட நேரம் செலவிடுவது.
- கடுமையான வாசனைகள்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
இதை சரியாக கண்டறிவதற்காக மருத்துவர்கள் வழக்கமாக இந்த தலைவலி எப்போது ஏற்படுகிறது மற்றும் தலையின் எந்த பாகத்தில் இது வழக்கமாக ஏற்படுகிறது, தலைவலிக்கு முன்போ அல்லது தலைவலிக்கும் சமயத்திலோ உணரப்பட்ட ஏதேனும் ஓசை அல்லது காட்சி, ஒற்றைத் தலைவலியின் தீவிரம் மற்றும் இது போன்ற இன்னும் பல கேள்விகளை கேட்பார்கள்.
மற்ற உடல் நிலைகளை அகற்ற சில சோதனைகள் செய்யப்படலாம். ஒரு விரிவான நரம்பியல் மதிப்பீடுடன் கூடிய உடல் பரிசோதனை செய்யப்படும். ஒருவேளை குழந்தைக்கு காய்ச்சல், கழுத்து விறைப்பு, நரம்பில் அசாதாரணத்தன்மை, பார்வை வட்டில் வீக்கம் அல்லது சமச்சீரற்ற அறிகுறிகள் (உடலின் ஒரு பாகத்தில் பலவீனம்) போன்றவை இருந்தால் கூடுதல் சோதனைகள் செய்யப்படும். ஒற்றைத் தலைவலி மிகத் தீவிரமாக இருந்தால் அதன் நோயியலுக்கான காரணங்களை அகற்ற எலெக்ட்ரோயென்சிபாலோகிராபி/மின்முனை வரையம் (ஈஈஜி) செய்யப்படும்.
ஒற்றைத் தலைவலி மிதமாக இருக்கும்பட்சத்தில் மருத்துவர்கள் வழக்கமாக ஓய்வு, மனஅழுத்தத்தை தவிர்ப்பது மற்றும் இந்த நிலையைத் தூண்டுபவைகளை கவனமாக கண்காணிப்பது போன்றவற்றை பரிந்துரைப்பார்கள். ஒற்றைத் தலைவலி தாக்கும் சமயத்தில் குழந்தைகளை எப்படி கரு நிலையில் (இடது பக்கம் சாய்ந்து ஒரு குழந்தையை போல சுருண்டு இருத்தல்) படுக்கவைக்கப்படவேண்டுமென்று அறிவுறுத்துவார்கள். தேவைப்பட்டால் வலி நிவாரணி மாத்திரைகளும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. சில சமயங்களில் ஓய்வெடுப்பது மற்றும் தூக்கத்திற்கான சிகிச்சை/ஹிப்னோடிக் தெரபியும் கைகொடுக்கிறது. எம்.எஸ்.ஜி மற்றும் சிட்ரிக் அமிலமுள்ள உணவுகளை தவிர்ப்பதற்காக உணவு முறையில் மாற்றங்கள் செய்யபடுகிறது. பயணத்தினாலோ அல்லது அசைவுகளாலோ ஒற்றைத் தலைவலி ஏற்படுபவர்களுக்கு அதற்கேற்ற மருந்துகள் வழங்கப்படுகிறது.
மிகத் தீவிரமான ஒற்றைத் தலைவலி ஏற்படுபவர்களுக்கு ட்ரிப்டான் என்றழைக்கப்படும் மருந்துகள் தேவைப்படக்கூடும்.