காலரா (வாந்தி பேதி நோய்) என்றால் என்ன?
காலரா என்பது ஒரு பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றாகும், இது முக்கியமாக அசுத்தமான உணவு அல்லது நீரை உட்கொள்வதால் ஏற்படுகிறது. இது ஒரு முக்கிய சுகாதாரம் சார்ந்த கவலையாக இருப்பதோடு சமூக வளர்ச்சியின்மையையும் குறிக்கிறது. சுத்தமான நீர் மற்றும் சாக்கடை கழிவுநீக்க ஏற்பாடுகள் குறைவாக உள்ள பகுதிகளுடன் காலராவின் எதிர்பாரா கிளர்ச்சி தொடர்புடையதாக உள்ளது. இது அனைத்து வயது வரம்புள்ள மக்களையும் பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.3 மில்லியன் முதல் 4.0 மில்லியன் மக்களுக்கு காலரா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அசுத்தமான உணவு அல்லது நீரை உட்கொண்டதற்கு பிறகு 12 மணிநேரத்திலிருந்து 15 நாட்களுக்குள் காலரா அறிகுறிகள் வெளிப்படத் தொடங்குகின்றன. பாதிக்கப்பட்ட நபர் 1-10 நாட்கள் வரை தன் மலத்தில் அந்த நுண்ணியிரியை சிந்துவதால் மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படும் சாத்தியமுள்ளது. இதன் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- நீர்க்க மலம் கழித்தலுடனான வயிற்றுப்போக்கு.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- நீர்ச்சத்துக் குறைவு.
- எலெக்ட்ரோலைட்டின்/மின்பகுளி சமச்சீரின்மை.
- தசை வலி.
- அதிர்ச்சி.
சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால் இது மிக தீவிரமான நீர்ச்சத்துக் குறைவை ஏற்படுத்தி மரணத்திற்கு வழி வகுத்துவிடும்.
குழந்தைகளிடம் கீழ்காணும் அறிகுறிகள் தென்படக்கூடும்:
- நினைவு பிறழ்தல்.
- வலிப்பு நோய்கள்.
- கோமா (ஆழ்மயக்கம்).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
காலரா என்பது விபிரியோ காலரே எனப்படும் பாக்டீரியாவினால் செரிமானப் பாதையில் ஏற்படும் ஒரு நோய்த்தொற்றாகும். இதன் விளைவாக தொடர்ச்சியான நீர்க்க மலம் கழித்தல் மற்றும் தீவிரமான நீர்ச்சத்துக் குறைவை ஏற்படுகிறது. பாக்டீரியத்தால் சிறுகுடலில் உண்டாகும் நச்சுக்களே இந்த மோசமான விளைவிற்கு காரணமாகிறது. இந்த நச்சுக்கள் வழக்கமான சோடியம் மற்றும் குளோரைடின் ஓட்டத்தை சேதப்படுத்துகிறது, இதனால் உடலிலிருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலுக்குத் தேவையான உப்புக்கள் மற்றும் திரவத்தை வெகுவாக இழக்கிறது.
இதன் அபாய காரணிகள் பின்வருமாறு:
- சுகாதாரமற்ற நிலைமைகள்.
- வயிற்றின் அமிலம் குறைவது அல்லது முழுமையாக இல்லாமல் போவது.
- பாதிக்கப்பட்ட நபர்களுடன் வாழ்வது.
- ஓ ரத்த வகை.
- பச்சையான அல்லது சமைக்கப்படாத உணவுகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்து உங்கள் மருத்துவர் உங்களை கீழ்கண்ட சோதனைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தலாம்:
- இரத்த பரிசோதனைகள்: அதிகரித்துள்ள வெள்ளை ரத்த அணுக்களையும் எலெக்ட்ரோலைட்/மின்பகுளி அளவுகளையும் சோதிப்பதற்கு செய்யப்படுகிறது.
- இரத்தத்தில் குளுக்கோஸ்: குளுக்கோஸின் அளவுகள் மிக மோசமாக குறைந்து உடல் நலக்குறைவை நீட்டிக்கலாம்.
- மலத்தின் மாதிரி: மலத்தின் மாதிரியில் விபிரியோ காலரேவை தனிமைப்படுத்தி அடையாளம் காண்பதற்காக செய்யப்படுகிறது.
- சிறுநீரக செயல்பாட்டின் சோதனைகள்: சிறுநீரகத்தின் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று சோதிப்பதற்கு செய்யப்படுகிறது.
இதன் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- வாய்வழியாக நீர்க்கரைசலை அளித்து தீர்வு காணுதல்: இந்த முறை உடலில் இழந்த சத்துக்கள் மற்றும் நீரை மீண்டும் நிரப்பி உடலின் எலெக்ட்ரோலைட்/மின்பகுளி சமநிலையை சீராக்குகிறது.
- நரம்பு வழியாக செலுத்தப்படும் திரவங்கள்: இதன் மூலம் திரவங்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்/மின்பகுளி இழப்பு சரிசெய்யப்படுகிறது.
- ஆண்டிபையோட்டிக்ஸ்/நுண்ணுயிர் எதிர்ப்பிகள்: பாதிப்பு மிக தீவிரமாக இருக்கும்பட்சத்தில் உடல் நலக்குறைவின் கால அளவை சுருக்குவதற்கும் மலத்தின் அளவை குறைப்பதற்கும் அளிக்கப்படுகிறது.
- துத்தநாகம் மிகுதியாக உள்ள உணவுகள்: இதனால் அறிகுறிகளில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றன.
- தடுப்பூசிகள்: இது முக்கியமாக பயணம் செய்பவர்கள், சுகாதார மற்றும் மனிதநேய பணியாளர்கள், நோய்யெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் மற்றும் வயிற்றின் அமில சுரப்பு குறைவாக உள்ளவர்கள் போன்றவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
சுய பராமரிப்பு குறிப்புக்கள் பின்வருமாறு:
- உணவு உண்பதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவவும்.
- நீங்கள் வெளியில் செல்லும்போதெல்லாம் உங்கள் கைகளை சுத்தம் செய்ய ஒரு சானிடைசரை/தொற்றுத் தடைப்பொருளை பயன்படுத்தவும்.
- கொதிக்கவைத்து நீரை மட்டுமே அருந்த வேண்டும் மற்றும் சூடான, நன்றாக சமைக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும்.
- பச்சையான உணவுகள் குறிப்பாக சமைக்கப்படாத இறைச்சி அல்லது மீன் போன்றவற்றை தவிர்க்கவும்.
- பால் பொருட்கள் அசுத்தமாவதற்கு வாய்ப்புடையவை என்பதால் அவற்றை சோதித்து பயன்படுத்துங்கள்.
உடனடி மற்றும் முறையான நிர்வாகம் மூலம் இறப்பு எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கலாம்.