போதைபொருளுக்கு அடிமையாதல் என்றால் என்ன?
ஒவ்வொரு நபரின் மூளையும் உடலும் போதை மருந்துகளை உட்கொள்வதற்கு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றும். போதை மருந்துகளை உட்கொள்ளும் ஒருவர் உடனடியாக அதற்கு அடிமையாவதில்லை, ஆனால் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு அதை பயன்படுத்துவது போதைப்பொருளுக்கு அடிமையாவதன் அபாயத்தை அதிகரிக்கும்.
போதைப்பொருளுக்கு அடிமையாதல் என்பது ஒரு மூளை குறைபாடாக வகைப்படுத்தப்படுகிறது, ஏனென்றால் அங்கு அந்த நபர் முழுமையாக போதைமருந்துகளை சார்ந்திருப்பதோடு அவன்/அவள் போதைப்பொருள் இல்லாமல் தன்னால் இயங்கமுடியாது என்று நம்புகிறார். இந்தப் பழக்கம் தான் அவர்களை தாங்கள் விரும்பிய விளைவை அடைவதற்காக குறிப்பிட்ட மருந்தை அதிக அளவில் வாங்குவதற்கும் எடுத்துக்கொள்வதற்கும் எந்த கடுமையான காரியங்களையும் செய்யத் தூண்டுகிறது.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
போதைக்கு அடிமையாதலின் சில அடையாளங்களும் அறிகுறிகளும் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.போதை மருந்திற்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் நபருக்கு ஆரம்ப காலத்திலேயே உதவி செய்வதற்காக அந்த நபரின் பெற்றோரும் நண்பர்களும் இந்த அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
அந்த அறிகுறிகள் இவையாகும்:
- சமூகத்திலிருந்து பின்வாங்குதல்.
- பசி குறைபாடு.
- தினசரி வாழ்வின் நடவடிக்கைகளில் ஆர்வம் குறைவது.
- பொழுபோக்குகளிலிருந்து பின்வாங்குதல்.
- அடிக்கடி போதைப்பொருட்களை வாங்குவதால் விளக்கப்படாத பொருளாதார இழப்பு.
- குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவமனை வருகைகள் என எல்லாவற்றையும் புறக்கணிப்பது மற்றும் தவிர்ப்பது.
- விளக்கப்படாத எரிச்சல் உணர்வை அனுபவிப்பது.
- விளக்கப்படாத உடல் எடை இழப்பு.
- வழக்கமில்லாத மற்றும் ஒழுங்கற்ற நடத்தையை வெளிப்படுத்துவது.
- மனரீதியான உணர்வின்மை மற்றும் உணர்வுரீதியான எதிர்ச்செயல் குறைவது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
போதைப்பொருளுக்கு அடிமையாதலின் காரணங்களை தெரிந்து கொள்வதற்கு சமூக ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒரு பரந்த பார்வை தேவைப்படுகிறது.
- நீண்ட நாள் மனஅழுத்தம் மற்றும் கவலையேற்படத்தக்கூடிய சூழ்நிலைகள் போன்ற உளவியல் ரீதியான பிரச்சனைகள் ஒரு நபரை மனரீதியான உணர்வின்மைக்காக போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு தூண்டக்கூடும்.
- வயது வந்தோரிடையே சக வயதுடையவர்கள் தரும் அழுத்தம் போதைப்பொருட்களின் பழக்கத்துக்கு ஒரு முக்கிய காரணமாகிறது.
- பெற்றோரின் கவனக்குறைவு, உடல்ரீதியான மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் ஆரம்ப நாட்களிலேயே போதைபொருட்களுக்கு வெளிப்படுத்தப்படுவது போன்ற சமூக அழுத்தங்களும் போதைப்பொருட்கள் பழக்கத்தை அதிகரிக்கிறது.
- சில நபர்கள் மரபுரீதியாகவே போதைப்பொருட்களுக்கு அடிமையாவதற்கு ஏதுவான நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
- வெவ்வேறு போதைப்பொருட்கள் வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அதற்கு அடிமையானவர்கள் அதற்கு வெவ்வேறு காரணங்களை தெரிவிக்கக்கூடும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
பெரும்பாலும் போதைக்கு அடிமையானவர்களுக்கு உதவி கிடைத்தவுடன் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் என்னவென்று தெரிவித்து விடுவார்கள்.இதனால் கண்டறிதல் சுலபமாகி விடும். எனினும் அந்த நபரால் தகவல்களை தெரிவிக்க முடியவில்லையென்றால் மருத்துவர் ரத்தத்தில் போதைப்பொருட்களின் இருப்பை கண்டறிய ரத்த சோதனைகளை செய்யக்கூடும்.
போதைப்பொருளுக்கு அடிமையானதற்கான சிகிச்சை பல பரிமாணங்களை கொண்டதாகும். போதைபழக்கத்தை வெல்வதில் உளவியல் ரீதியான உதவியோடு குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவும் பெரும் பங்கு வகிக்கிறது.
மருந்துகளை பயன்படுத்துவதோடு சேர்ந்து மருத்துவர் அந்த நபரை ஒரு மறுவாழ்வு திட்டத்திலும் சேரும்படி செய்வார். போதைப்பழக்கம் மீண்டும் ஏற்படாதிருக்க மருந்துகளுடன் சிகிச்சை அமர்வுகளும் சேர்த்துக்கொள்ளப்படும்.
போதைப்பழக்கம் மிகத் தீவிரமானதாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம்.