கால்விரல் எலும்பு முறிவு என்றால் என்ன?
பாதங்களில் ஏற்படும் காயம் அல்லது அதிர்ச்சியானது, எலும்பை இரண்டாகவோ அல்லது பல துண்டுகளாகவோ உடைத்து, எலும்பு முறிவையோ அல்லது மெல்லிய மயிரிழை விரிசலையோ ஏற்படுத்தும். இதன் தீவிரத்தை பொறுத்து பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.
இதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
- தொடர்ச்சியான துடிக்கும் வலி கால்விரல் எலும்புமுறிவின் முக்கிய அறிகுறியாகும்.
- உங்கள் கால்விரலின் மீது வீக்கம் உருவாகும்.
- முறிந்த கால்விரலின் எந்தவொரு அசைவும் கடினமானதாகும். அது நகரவோ, நடக்கவோ முடியாதபடி மிகுந்த வலியை கொடுக்கும்.
- மயிரிழை எலும்பு முறிவு வகையில், வலி குறைவாக இருக்கும் மற்றும் உங்களால் எந்த தொந்தரவுமின்றி எழுந்து நடக்கவும் முடியலாம்.
- எலும்பு முறிவு கடுமையாக இருந்தால், விரல் நீல நிறத்திலும் அமைப்பில் மாறுபட்டும் காணப்படும்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
- கனமான பொருள் கால்விரலின் மீது விழுவதால் எலும்பு முறிவு ஏற்படும். கால்விரல் பாதம் மிகவும் துருத்திக்கொண்டிருக்கின்ற பாகம் என்பதால் இதுபோன்ற காயங்களுக்கு உள்ளாகிறது.
- உங்கள் பாதத்தை ஏதேனும் கடினமான பொருள்களில் இடித்துக்கொண்டாலோ அல்லது ஏதேனும் அதிர்ச்சியாலோ எலும்பு முறிவு ஏற்படலாம்.
- எலும்புப்புரை நோயினால் பலவீனமான எலும்புகளை உடையவர்கள் அடிக்கடி எலும்புமுறிவால் அவதிப்படுவார்கள். தொடர்ச்சியான நடையினாலும், தவறாகப்பொருந்துகின்ற காலணிகளாலும் கூட அவர்களுடைய எலும்புகள் முறிந்துவிடும்.
- அழுத்த எலும்பு முறிவுகள் மற்றும் மயிரிழை எலும்பு முறிவுகள், எலும்பின் மீது ஏற்படும் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது தொடர்ச்சியான அசைவின் காரணமாகவோ ஏற்படும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
எலும்பியல் மருத்துவர் கால்விரல் எலும்புமுறிவை உடல் பரிசோதனை மற்றும் எக்ஸ்-கதிர்கள் சோதனை மூலம் கண்டுபிடிப்பார். காயம் காரணமாக ஏதேனும் சிராய்ப்புகள் அல்லது திறந்த காயங்கள் ஏற்பட்டிருந்தால், நோய்தொற்று காணப்படலாம். இதைக் கண்டறிய மருத்துவர் இரத்த பரிசோதனையை அறிவுறுத்துவார்.
எலும்பு முறிவிற்கான மருத்துவ சிகிச்சை அதன் தீவிரத்தை பொறுத்து அமையும்.
- சிறிய மற்றும் மயிரிழை எலும்பு முறிவுகளுக்கு ஓய்வு மற்றும் வலிநிவாரணிகளைத்தவிர வேறெந்த தலையீடும் தேவையில்லை. எலும்பு முறிவு அசையாமலிருக்க மெல்லிய துணிக்கட்டே போதும்.
- எலும்புமுறிவுடன் நோய்த்தொற்றும் இருந்தால் ஆண்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரை செய்யப்படும்.
- முறிந்த கால்விரலின் அசைவை குறைக்கவும், நிலைப்படுத்தவும் அது அணைவரிக்கட்டை கொண்டு பிற கால்விரல்களுடன் பிணைக்கப்படும்.
- எலும்பு முறிவானது இடம்பெயர்ந்திருந்தால் அதனை சீரமைக்க வேண்டும். அதேபோல் எலும்பானது இரண்டு துண்டுகளுக்கு மேல் உடைந்திருந்தால் அறுவைசிகிச்சை தேவைப்படும்.
- எலும்பு முறிவுகளுக்கான வீட்டு பராமரிப்பு, பாதத்தை உயர்த்திய நிலையில் வைத்திருத்தல், பனிக்கட்டி ஒத்தடம் கொடுத்தல் மற்றும் போதிய அளவு ஓய்வெடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- பெரும்பாலும் முறிந்த கால்விரல் எலும்பு நான்கு முதல் எட்டு வாரங்களுக்குள் குணமடைந்துவிடும்.