இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (ஜெர்ட்) என்றால் என்ன?
ஜெர்ட் எனப்படும் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் என்பது உணவுக் குழாயின் (அன்னக்குழாய்) கீழ் பகுதியில் உள்ள வட்ட வடிவவிலான தசை சரியாக மூடப்படாத நிலையில் இருக்கும் இதனால் வயிற்றின் உட்பொருட்கள் இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன. இது எரிச்சலை ஏற்படுத்திகிறது. இது நெஞ்செரிவு போன்று இருக்கும். எனினும், ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு மேலாக நெஞ்செரிச்சலை உணர்ந்தால், அது ஜெர்ட் நோயாக அறியப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஜெர்ட் நோயின் முதன்மை அறிகுறி இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் நெஞ்செரிச்சலே ஆகும்.
மற்ற அறிகுறிகளாவன:
- மார்பின் நடுப்பகுதியில் எரிவது போன்ற உணர்வு.
- விக்கல்கள்.
- தொண்டையில் எரிவது போன்ற உணர்வு.
- விழுங்குவதில் சிரமம் ஏற்படுதல்.
- சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்.
- வயிறு உப்பி காணப்படுதல்.
- சாப்பிட்ட பிறகு உடம்பு சரியில்லாமல் போவது.
- வாயில் விரும்பத்தகாத புளிப்பு சுவை உண்டாகுதல்.
- சாப்பிட்ட பிறகு மார்பில் வலி உண்டாகுதல்.
- எதிர்க்களிப்பு (வயிற்றிலிருக்கும் அமிலம் வாய் வரை வருவதால் விரும்பத்தகாத சுவையை உணர்தல்).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
உணவு குழாயின் கீழ்ப்பகுதியிலிருக்கும் தசைகள் பலவீனமடைவதாலும், வயிற்றினுள் சென்ற பொருட்கள் தொண்டை வரை உயர்ந்து வருவதை தடுக்க இயலாமல் போவதாலும் ஜெர்ட் ஏற்படுகிறது. பல காரணங்களால் இந்நோய் உண்டாகிறது, அவைகளாவன:
- உடல்பருமன்.
- காப்ஃபைன் அல்லது மது அதிகம் உட்கொள்ளுதல்.
- கர்ப்பம்.
- அதிக கொழுப்பு கொண்ட உணவு.
- மனஅழுத்தம்.
- இரைப்பை ஏற்றம் அல்லது இயற்பிளவுப் பிதுக்கம் (மேல்வயிறு மார்பின் பக்கமாக நகருதல்).
- புகைபிடித்தல்.
- வலி நிவாரணி போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்.
- காரமான உணவுகளை உட்கொள்ளுதல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
அறிகுறிகளை பற்றி ஆராய்வதே நோய் கண்டறிதலின் முதல் படி ஆகும். ஜெர்ட் நோயை உறுதிப்படுத்த பல பரிசோதனைகள் உள்ளன. அவைகளாவன:
- உள்நோக்கியியல் (எண்டோசுக்கோப்பி) (உணவு குழாயில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என கண்காணிக்க).
- அழுத்த அளவியல் (மேனோமெட்ரி) (உணவு குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள தசை நன்றாக வேலை செய்கிறதா என கண்காணிக்க).
மருத்துவர் நெஞ்செரிச்சலை தடுக்க சில வழிமுறைகளை பரிந்துரைக்கலாம். அவைகளாவன:
- அமிலத்தன்மையை தூண்டும் உணவுகளை தவிர்த்தல்.
- எடை குறைப்பு.
- தலையை நன்றாக உயரமான மேற்பரப்பில் வைத்து உறங்க வேண்டும்.
- சிறிய அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஓய்வெடுக்கும் உத்திகளை நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
- காப்ஃபைன், புகைபிடிப்பது மற்றும் மதுவைத் தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான நிகழ்வுகளில், நெஞ்செரிவிலிருந்து நிவாரணம் பெற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
தீவிரமான நிகழ்வுகளில், தசைகளை பலப்படுத்த அறுவை சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.