உஷ்ண பிடிப்புகள் என்றால் என்ன?
உஷ்ண பிடிப்புகள் என்பது பொதுவாக கைகளில் அல்லது கால்களில் ஏற்படும் தசை வலி அல்லது தசைப் பிடிப்பு ஆகும். சில நேரங்களில், ஒருவர் அடிவயிற்று பகுதியில் உஷ்ண பிடிப்புகளை அனுபவிக்கக்கூடும். இந்த வயிற்றுப் பிடிப்புகள் நீண்ட நேரத்திற்கு நீடித்திருக்கும். இது மிகவும் கடுமையானதாகவும் இருக்கக் கூடும். வெப்பமான (கோடை) காலத்தில் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்படும் மக்களிடத்தில் இது பொதுவாக காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கால்கள், கைகள் அல்லது அடிவயிற்றுப் பகுதியின் தசைகளில், கூர்மையான மற்றும் கடுமையான வலியை உணர்தலே உஷ்ண பிடிப்புகளின் முக்கிய அறிகுறியாகும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒருவர் அதிகப்படியான வியர்வை மற்றும் தாகத்தை அனுபவிப்பார்.
கை குழந்தைகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களிடத்தில் உஷ்ண பிடிப்பு ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. ஏனெனில், அவர்கள் உடலால் வெப்ப நிலையை சரிவர கட்டுப்படுத்த இயலாது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வெப்பமான சுற்றுச்சூழலில் அதிகமாக வியற்பதன் காரணமாக ஏற்படும் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் மின்பகுபொருள் சமநிலையின்மையே உஷ்ண பிடிப்பிற்கான முக்கியமான காரணமாகும். தளர்வுறாத உடல் செயல்பாடு காரணமாக, மின்பகுபொருள் சமநிலையின்மை ஏற்படுகிறது. இதுவே தசைப்பிடிப்புக்கு வழிவகுத்து, தசை வலியை விளைவிக்கிறது.
கடுமையான உடல் ரீதியான செயல்பாடு மற்றும் தசை அதிகப்படியாக சோர்வடைதல் போன்றவையால், சுருக்கங்களை தானாகவே கட்டுப்படுத்தும் திறனை இழக்கச்செய்து உஷ்ண பிடிப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று சில மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
அறிகுறிகளைப் பற்றி விசாரித்தல் மற்றும் தனிப்பட்ட செயல்பாட்டுத் தன்மை பற்றிய கேள்விகள் மூலமாகவும் தான் மருத்துவர் உஷ்ண பிடிப்புகளை கண்டறிவார். நீர்ச்சத்துக் குறைவு மற்றும் மின்பகுபொருள் சமநிலையின்மை ரீதியாக காணப்படும் அறிகுறிகளைக் கண்டறியும் பொருட்டு மருத்துவர் ஒரு உடல் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடும்.
உஷ்ண பிடிப்புகள் ஏற்படும் போது, ஒருவர் பின்வருவனவற்றை மேற்கொள்ளுதல் வேண்டும்:
- கடுமையான உடல் செயல்பாட்டில் ஈடுபடுதலை தவிர்த்தல்.
- ஓய்வெடுக்க்கும் வகையில் உள்ள குளிர்ச்சியான இதமான இடங்களைத் தேர்ந்தெடுத்தல்.
- குளிர்ந்த நீரில் குளித்தல்.
- ஏராளமான திரவங்கள் மற்றும் வாய்வழி மீள்நீரூட்ட கரைசலை உட்கொள்ளுதல்.
- வலியைக் குறைக்க வலி மிகுந்த தசைகளை மெதுவாக உருவி விடுதல் (மசாஜ்)
ஒருவருக்கு வாந்தி அல்லது குமட்டல் இருக்கும் பட்சத்தில், மருத்துவர் நரம்பு வழி (IV) திரவங்களை கொடுப்பார்.மேலும் வலியைக் குறைக்க, மருத்துவர் வலி நிவாரண மருந்துகளை பரிந்துரைக்கக் கூடும்.