தசைப்பிடுப்புகள் என்றால் என்ன?
ஒன்று அல்லது பல உடல் தசைகளின் திடீரென ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத வலிமிகு சுருக்கங்கள், தசைப்பிடிப்புகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த சுருக்கங்கள் எளிதில் தளர்ந்து விடாது மற்றும் இது பொதுவாக உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும். கால் தசைப்பிடிப்பு, தசைப்பிடிப்பு வகைகளில் மிகவும் பொதுவான ஒன்று. இதைத் தவிர, கால், கை, மேல்கை, வயிறு, தொடைகள் ஆகியவற்றிலும் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. வயதானவர்கள், பருமனானவர்கள், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் நரம்பு மற்றும் தைராய்டு கோளாறுகள் போன்ற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பால் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து மிகவும் அதிகம்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தசைபிடிப்பின் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும், உதாரணமாக, அது ஒரு சிறிய ஒரு நொடி வலி அல்லது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தலாம். பிடிப்புகள் தோலுக்கு அடியில் ஒரு துடிப்பு போல தோன்றலாம் அல்லது சுட்டிக்காட்ட கடினமானதாக இருக்கலாம். இது பொதுவாக சில நொடிகளுக்கு தோன்றும் அல்லது பல நிமிடங்கள் நீடிக்கலாம். இவை முழுமையாக மறைவதற்கு முன்பு பலமுறை மீண்டும் மீண்டும் தோன்றலாம். வியர்வை, காயம் அல்லது மற்ற அறிகுறிகளுடன் தசை பிடிப்பு தொடர்புடையதாக இருக்கலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சில சமயங்களில் தசைப்பிடிப்புக்கான காரணம் கண்டறியப்படாமலேயே இருக்கலாம். இருப்பினும் தசைப்பிடிப்பின் பொதுவான மற்றும் அறியப்பட்ட காரணங்கள் பின்வருமாறு:
- தசைகளில் திரிபு.
- நீர்ப்போக்கு.
- மெக்னீசியம், சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மின்பகுளிப்பொருட்களில் குறைந்த நிலை.
- தசைகளுக்குக் குறைந்த ரத்தம் அனுப்பப்படுதல்.
- சிறுநீரகத் தூய்மிப்பு (டயாலிசிஸ்).
- சில மருந்து வகைகள்.
- கர்ப்பகாலம்.
- ஒரு விபத்து அல்லது காயம் காரணமாக நரம்புகளில் ஏற்படும் அழுத்தம்.
- அதிக உழைப்பு.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
தசைப்பிடிப்புகளை ஏற்படுத்தும் அடிப்படை காரணத்தை கண்டறிய நோய் கண்டறிதல் முறை செய்யப்படுகிறது. அவை:
- உடல் பரிசோதனை.
- தசை திசுப்பரிசோதனை.
- தசை மின்னலை விரைவி.
- நரம்பு கடத்துதல் ஆய்வுகள்.
- கிரியாட்டினின் கைனேஸ் ரத்த பரிசோதனை.
வழக்கமாக தசைப்பிடிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் எதுவும் தேவையில்லை. மேலும் அதற்கு நிவாரணம் அளிக்க சில முறைகள் பின்வருமாறு:
- தசைகளுக்கு மசாஜ் செய்வது அல்லது நீட்சி.
- உங்களுக்கு நீர்ப்போக்கு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதிகமாக திரவங்களை உட்கொள்ளுதல் மற்றும் உப்புச்சத்தை திரும்பப் பெறச் செய்தல் உதவும்.
இறுக்கமான தசைகள் மீது சூடான ஒத்தடம் கொடுத்தல் அல்லது தளர்வான தசைகள் மீது ஐஸ் பேக் ஒத்தடம் கொடுத்தல்.
தசைப் பிடிப்பை ஏற்படுத்தும் சில அடிப்படைக் காரணங்கள் இருந்தால் மருத்துவர் உங்களுக்கு தேவையான மருந்துகளை பரிந்துரைக்கலாம். தசைகளை நீட்டிப்பது மூலமாகவும் அதிகமாக திரவங்கள் அருந்துதல் மூலமாகவும் தசைப்படிப்பை நீங்கள் தவிர்க்கலாம்.