தசை பலவீனம் என்றால் என்ன?
தசை பலவீனம் என்பது உங்களது தசைகள் சாதாரண நடவடிக்கைகளை செய்யமுடியாமல் திறன் குறைந்து போகும் ஒரு நிலை ஆகும்.இது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை செய்ய தசை வலிமை இல்லாத நிலை. தசை பலவீனம் தற்காலிகமானதாக இருக்கலாம், உதாரணமாக, கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் தசை பலவிதம் ஏற்பட்டிருந்தால் அது ஓய்வுக்குப் பின் சரியாகிவிடும்.எனினும், எந்த ஒரு வெளிப்படையான காரணமின்றி தசைகள் தொடர்ந்து பலவீனமாக இருக்க சில அடிப்படை நிலைமைகள் காரணமாக இருக்கலாம்.இருப்பினும், சோர்வு தசை பலவீனத்திலிருந்து இருந்து வேறுபட்டதாகும்..
அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
தசை பலவீனம் பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்:
- ஒரு பொருளை பிடிக்க தசை வலிமை இல்லாமை.
- உணர்வுக்குறை அல்லது உணர்ச்சிகள் இழப்பு.
- உறுப்புகளை அசைக்க , நிற்க, நடக்க அல்லது நேராக உட்கார சிரமமாக இருத்தல்.
- முகத் தசைகளை அசைக்கவோ அல்லது பேசவோ முடியாமை.
- சுவாசிப்பதில் சிரமம்.
- நினைவிழப்பு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தசை பலவீனமாக பல அடிப்படை காரணங்கள் இருக்கலாம். அவை பின்வருமாறு:
- தசைநார்த் தேய்வு (மஸ்குலர் டிஸ்ட்ரோபி).
- பக்கவாதம்.
- மின்பகுளி ஏற்றத்தாழ்வு.
- உயிர்ச்சத்து (வைட்டமின்) டி குறைபாடு.
- நரம்பு சேதம்.
- விபத்து அல்லது காயம்.
- தசை வீக்கம்.
- போலியோ.
- இயக்கு தசைச்சோர்வு நோய் (மயஸ்தீனியா கிராவிஸ்).
- கிரேவ்ஸ் நோய்.
- குய்லேன்- பாரே சிண்ட்ரோம்.
- பன்மடங்கு திசு கடினமாதல் (மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ்).
- சில மருந்துகள் மற்றும் மதுப்பழக்கம்.
- மன அழுத்தம்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
சோர்வை தசை பலவீனத்திலிருந்து வேறுபடுத்தி பார்ப்பது அவசியமாகும் .சோர்வென்பது மீண்டும் மீண்டும் முயற்சித்த பிறகு இயங்குவதற்கு இயலாமை ஆகும், அதேசமயம் தசை பலவீனம் என்பது முதல் முயற்சியிலேயே இயங்க முடியாத நிலை ஆகும்.உங்கள் மருத்துவர் ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையை நோயறிதலுக்கு முதல் படிவாக எடுத்துக்கொள்வார், அதன்பிறகு முழுமையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுவான நோயறிதல் பரிசோதனைகள் பின்வருமாறு:
- இயக்க செயல்பாடு சோதனை.
- நுரையீரல் மற்றும் இதய செயல்பாட்டு மதிப்பீடு.
- வைட்டமின்கள், மின்பகுளிகள் மற்றும் இயக்குநீர் (ஹார்மோன்கள்) அளவுகளின் அளவை சரிபார்க்க இரத்த ஆய்வு.
- நரம்பு இயக்கத்தை சோதிக்க தசை மின்னியக்கப் பதிவியல்.
- எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன்.
- தசை திசு பரிசோதனை (பையாப்சி).
சிகிச்சை முறைமைகள் பின்வருமாறு:
- நோயின் அடிப்படைக் காரணத்தை பொறுத்து வைட்டமின் பிற்சேர்வுகள்,வலி நிவாரணிகள், அழற்சி எதிர்ப்பு அல்லது நோய்எதிர் திறனொடுக்கி மருந்துகள் போன்ற மருந்துகள்.
- தசைகளை வலுப்படுத்தவும், இயக்கத்தை மேம்படுத்தவும் இயன் மருத்துவம் (பிசியோதெரபி) மற்றும் மின் மருத்துவம் (எலெக்ட்ரோதெரபி).
- விபத்து அல்லது காயம் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை.
இயன் மருத்துவரின் (பிசியோதெரபிஸ்ட்) மேற்பார்வையில் முறையான உடற்பயிற்சிகள் மற்றும் தாதுக்கள் மற்றும் உயிர்ச்சத்து நிறைந்த சீரான உணவு உட்கொள்ளுதல் ஆகியவை உங்கள் தசை வலிமையை திரும்பப் பெற உதவும்.அறிகுறிகள் ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சனையைக் குறிக்கும் என்பதால் சரியான நோயறிதல் மற்றும் உடனடி சிகிச்சை அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.எனவே, அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.