ஓபியாயிட் நச்சுத்தன்மை என்றால் என்ன?
ஓபியாயிட் நச்சுத்தன்மை என்பது தெரிந்தோ தெரியாமலோ அளவிற்கு அதிகமான ஓபியாயிட் மருந்துப்பொருளை உட்கொள்ளுதலால் வரும் நிலை ஆகும். ஓபியாயிட் என்பவை மருந்துகளில் வலி நிவாரணி மருந்து வகையில் சேர்ந்தவை. இம்மருந்தை நீண்ட காலம் உபயோகித்தால் இதனை தாங்கும் சக்தியை உடல் வளர்த்துக்கொள்கின்றது. இதனால் தேவையான நிவாரணம் பெற அதிக அளவில் மருந்தை உட்கொள்ள வேண்டி இருக்கும். அளவிற்கு அதிகமாக உட்கொள்ளுதல் உடலின் பல உள்ளுறுப்புகளை பாதித்து பின்னர் சரியான நேரத்தில் தீவிர சிகிச்சை கொடுக்காமல் விட்டுவிட்டால் இறப்பு நேரிடலாம்.
ஓபியாயிட்டின் தவறான பயன்பாடு ஆசியாவில் 0.35% உள்ளது.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
கீழ்வரும் அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் ஓபியாயிட் மருந்தை அதிகமாக எடுத்துக்கொணடதாக உணரலாம்:
- குண்டூசி முனை அளவு கண்மணி (சுருங்கிய கண்மணி).
- நினைவுத்தன்மையை இழத்தல்.
- மூச்சு விடுவதில் சிரமம்.
- குறைந்த இரத்த அழுத்தம்.
- இதயத் துடிப்பு குறைதல்.
- வெளிறிய தோற்றம்.
- உடல் வெப்பம் குறைதல்.
- முழுமையாக சிறுநீர் கழிக்காமல் இருத்தல்.
- பேதி அல்லது மலச்சிக்கல்.
மூளையில் மூச்சு விடுவதற்கு காரணமாக உள்ள மூளை பகுதியை ஓபியாயிட் மருந்துகள் கடுமையாக பாதிப்பதால் அதனை அதிகப்படியாக உட்கொள்ளுதல் மூச்சுவிடுவதில் பெரும் சிரமத்தையும், சில சந்தர்ப்பங்களில் மரணத்தையும் கூட உண்டாக்குகிறது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
ஓபியாயிட் அதிகமாக உட்கொள்ளுதலுக்கு காரணம் ஓபியாயிட்டே ஆகும். கீழ்வரும் காரணங்களால் உங்களுக்கு ஓபியாயிட் நச்சுத்தன்மை உண்டாகும் அபாயம் உள்ளது:
- பரிந்துரைத்த அளவை விட அதிகமான ஓபியாயிட் மருந்துகளை உட்கொள்ளுதல்.
- மதுவுடனோ அல்லது மற்ற மருந்துகளுடனோ ஓபியாயிட்டை சேர்த்து உட்கொள்ளுதல்.
- ஓபியாயிட் மருந்துகளை ஊசி மூலம் உடலில் ஏற்றுதல்.
- படப்படப்பு (ஓபியாயிட் உபயோகிப்பதை நிறுத்தி 3 முதல் 4 நாட்களில் உண்டாகும்.
- எச்.ஐ. வி நோய்த்தொற்று, மன அழுத்தம், சிறுநீரக அல்லது கல்லீரல் செயலிழப்பு.
- 65 வயதை கடந்தவர்கள்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
உடலின் முக்கிய உயிர்நிலைகளை, அதாவது சுவாச விகிதம், இதயத் துடிப்பு விகிதம், இரத்த அழுத்தம் மற்றும் கண்களின் சுருங்கிய நிலையை கண் பரிசோதனை மூலம் பார்த்து, ஓபியாயிட் நச்சுத்தன்மை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிவர். இரத்தத்தின் ஓபியாயிட் அளவினையும் உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தையும் கண்டறிய ஆய்வுக்கூட பரிசோதனைகளை மருத்துவர் மேற்கொள்வார்.
முதலில், மூச்சுக்குழாயில் அடைப்பில்லாததை உறுதி செய்து கொண்டு பிராணவாயுவை செலுத்துதல் மருத்துவர்கள் அளிக்கும் முதல் சிகிச்சை ஆகும். அதன்பின் ஓபியாயிட் நச்சுத்தன்மைக்கான மாற்று மருந்தை ஊசி மூலமோ மூக்கின் வழியாகவோ செலுத்துவர். நச்சு முறிப்பானை முடிந்த வரை சீக்கிரம் கொடுத்தால் அது ஓபியாயிட் நச்சுத்தன்மைக்கான எதிர்விளைவை அதிவிரைவில் ஏற்படுத்தி உயிரிழப்பு நேராமல் காக்கும். நச்சுமுறிப்பானின் அளவு உடலில் உள்ள ஓபியாயிட் அளவைக்கொண்டு வேறுபடலாம்.