பயம் (அச்சக் கோளாறுகள்) என்றால் என்ன?
நிஜமாக எந்த ஒரு ஆபத்து இல்லாத போதும் ஒரு பொருளை அல்லது சூழ்நிலையை கண்டு அதிக அச்சம் கொள்ளுதல் பயம் (அச்சக் கோளாறுகள்) எனப்படும்.நீங்கள் பயப்படுகிற ஏதேனும் ஒரு பொருள் அல்லது சூழ்நிலையை பற்றி சிந்திக்கும் போது அவற்றை பற்றி நீங்கள் கவலை கொள்ளலாம்.மன அழுத்தம் உள்ளபோது அதைப்பற்றி கவலைப்படுவது முற்றிலும் சாதாரணமான ஒன்றாகும்.ஆனால், உண்மையான காரணம் மற்றும் ஆபத்து இல்லாத ஒரு சூழ்நிலையில் அதைப்பற்றி கவலை கொள்ளுதல் வழக்கத்திற்கு மாறான நிலையாகும்.இதனால் இந்த அச்ச கோளாறு பிரச்சனை உங்களது அன்றாட வாழ்க்கையில் ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.பொதுவாக விலங்குகள், பூச்சிகள், ஊசி, உயரம் , பொது மக்கள் மத்தியில் பேசும் போது, மற்றும் மக்கள் கூட்டமாக உள்ள இடம் போன்றவற்றிற்கு அச்சக் கோளாறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு இந்திய ஆய்வுக் கட்டுரையின் படி, பயம் (அச்சக் கோளாறுகள்) என்பது ஒரு பதற்றக் கோளாறு ஆகும் மற்றும் இந்திய மக்கள் தொகையில் இதன் பாதிப்பு 4.2% ஆக உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பயம் மற்றும் பதற்றத்துடன் சேர்ந்து எதிர்கொள்ளப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- தலைச்சுற்றல் அல்லது மயக்கம் அடைவது போலத் தோன்றுதல்.
- அதிகரித்த இதய துடிப்பு.
- விழுங்குவதில் சிரமம் மற்றும் சுவாதித்தலில் சிரமம்.
- வியர்த்தல்.
- மார்பில் வலி ஏற்படுதல்.
- குமட்டல் மற்றும் வாந்தி.
- நடுக்கம்.
- உணர்வின்மை.
- சுற்றுச் சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு இழப்பு.
அறிகுறிகளின் தீவிரத்தன்மை நபருக்கு நபர் மாறுபடும்.நோய் முற்றிய சூழ்நிலைகளில் அச்சக் கோளாறானது பீதி தாக்குதல் கோளாறு போன்ற மற்ற பதற்ற கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இந்த அச்சக் கோளாறுகள் ஏற்படுவதற்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை.பின்வரும் காரணங்களால் இந்நோய் ஏற்படலாம். அவை பின்வருமாறு:
- கடந்த கால சூழ்நிலைகள் (உதரணமாக, விமான பயணம் அல்லது பொது மக்கள் மத்தியில் பேசும் போது ஏற்பட்ட மோசமான அனுபவம், லிப்ட்டில் சிக்கி கொண்ட போது, குழந்தை பருவத்தில் ஏற்பட்ட நாய்க்கடி, அருகில் நிகழ்த்த விபத்தில் ஏற்பட்ட மரணம் மற்றும் பல).
- குடும்பத்தினரிடத்தில் இது போன்ற பயம் இருத்தல்.
- மரபணு காரணமாக.
- மன அழுத்தம் அல்லது பதற்ற கோளாறு பாதிக்கப்பட்ட நபர்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஒரு பொருள் அல்லது சூழ்நிலைகளின் காரணமாக அச்சக் கோளாறு இருப்பின், முதலில் அதை பற்றி யாராவது ஒருவரிடம் நீங்கள் பேச வேண்டும்.அவர்கள் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பராக இருக்கலாம்.இரண்டாவது, யோகா, தியானம் மற்றும் சுவாச கட்டுப்பாடு போன்ற தளர்வு உத்திகள் மூலம் உங்களை அமைதியாக வைத்து கொள்ள உங்கள் உடலுக்கு கற்பிக்கலாம்.
நீங்கள் தொழில்முறை உதவியை பெற விரும்பினால், உங்கள் மருத்துவரை அணுகவும்.இந்த அச்சக் கோளாறு நோய் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதன் தீவிர தன்மையை அடையாளம் கண்டபின் அவர் / அவள் உங்களுக்கு சிகிச்சையளிப்பார்.பெரும்பாலான நோயாளிகளுக்கு, சிகிச்சை தேவைப்படுவதில்லை.இந்நோய்க்கு கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
- படிப்படியாக பயத்தை எதிர்கொண்டு சிந்தனையில் மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆலோசனை மற்றும் சிகிச்சை.
- பயத்துடன் கூடிய பதற்ற கோளாறு பிரச்சனைக்கு சிகிச்சையளிக்கக்கூடிய மருந்துகள்.
- இது போன்ற அச்சக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் மேற்கொள்ளப்படும் குழு சிகிச்சை முறை.
- அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை.
- யோகா மற்றும் தியானம் போன்ற தளர்வு உத்திகள்.