பாக்டீரியா தொற்று நோய்கள் என்றால் என்ன?
இயற்கையாகவே, உடலின் உள்ளே உள்ள பாக்டீரியா எந்த தீங்கும் ஏற்படுத்தாது, ஆனால் உடலின் வெளியே சுற்றுச் சூழலில் வேறு சில பாக்டீரியா உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் உடலின் உள்ளே நுழையும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது, இவை நோய்க்கிருமி பாக்டீரியா என்று அழைக்கப்படுகின்றன. சில சூழ்நிலைகளில், உள்ளேயுள்ள கூட்டுயிரி பாக்டீரியா பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதன் வரம்பு மீறிய வளர்ச்சியின் காரணத்தால் நோய்த்தாக்கத்திற்கு வழிவகுக்கும். மற்ற உறுப்புகளை காட்டிலும் நுரையீரல், தொண்டை, குடல், தோல் ஆகியவை பாக்டீரியாவினால் பாதிப்படைகின்றன. பாக்டீரியா தொற்று நோய்கள் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஒரு ஆரோக்கியமான நபருக்கு பரவக்கூடும். இதனால், தனிப்பட்ட மற்றும் சமூக சுகாதாரத்தை பராமரிப்பதற்கு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் நோய்த்தொற்றின் பரவாமல் தடுக்க வேண்டும்.
இதன் முக்கிய அறிகுறிகள் யாவை?
பாக்டீரியா தொற்று நோயின் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் தொற்றுநோயின் தீவிரத்தைப் பொறுத்து வேறுபடுகின்றன. பாக்டீரியா தொற்று நோயின் பொதுவான அறிகுறிகள்:
- இருமல்.
- காய்ச்சல்.
- தலைவலி.
- குளிர்.
- வியர்த்தல்.
- தசை வலி.
- சோர்வு.
- மூச்சுத்திணறல்/சுவாசத்தலில் சிரமம்.
- பாதிக்கப்பட்ட பகுதியில் வலி மற்றும் அசௌகரியம்.
- பாதிக்கப்பட்ட பகுதியின் வீக்கம் மற்றும் சிவத்தல்.
- பசியின்மை.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
பொதுவான நோய்த்தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் பின்வருமாறு:
- ஸ்ட்ரெப்ட்டோக்காக்கஸ்.
- ஸ்டெஃபிலோகாக்கஸ்.
- ஈ – கோலை.
- கிலெபிஸிேல்லா.
- சூடோமோனாஸ்.
- மைக்கோபாக்டீரியம்.
பாக்டீரியா தொற்று நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- வெட்டுகள் மற்றும் காயங்கள்.
- பாக்டீரியா தொற்று நோய் உள்ள ஒரு நபருடன் தொடர்பு கொள்ளுதல்.
- அசுத்தமான உணவு மற்றும் நீர் உட்கொள்வது.
- நோய்த்தொற்று இருக்கும் ஒரு நபரின் மலத்தோடு தொடர்பு ஏற்படுதல்.
- பாக்டீரியா நோய்த்தொற்று இருக்கும் ஒருவர் இருமும்போது வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகளை சுவாசித்தல்.
- அசுத்தமான மேற்பரப்புக்களை தொடுதல் போன்ற மறைமுக தொடர்பு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர்கள் நோய் கண்டறிதலை பின்வரும் முறையில் மேற்கொள்கின்றனர்:
- ஒருவரின் மருத்துவ வரலாற்றைப் பற்றிய தகவல்களைப் பெறுதல்.
- தனிப்பட்ட உடல் பரிசோதனை.
- கதிரியக்க கண்டுபிடிப்புகள்.
- இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் போன்ற ஆய்வக சோதனைகள்.
பாக்டீரியா தொற்று நோயின் துல்லியமான சிகிச்சையானது பாக்டீரியாவின் வகை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியையும் சார்ந்தது. மேற்பூச்சு, வாய்வழி, அல்லது உட்செலுத்தத்தக்க நுண்ணுயிர் எதிர்ப்பி சிகிச்சையை பொதுவாக பாக்டீரியா தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மருத்துவர் பரிந்துரைக்கின்றனர். சில நேரங்களில் முன்னர் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பி போதுமான அளவு பாக்டீரியாவை அகற்றாத போது மருத்துவர் நுண்ணுயிர் எதிர்ப்பியை மாற்ற நேரிடுகிறது.