ஹெபடைடிஸ் என்றால் என்ன?
ஹெபடைடிஸ் என்பது உடலின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரலில் ஏற்படும் அழற்சி ஆகும். கல்லீரல் என்பது உணவை செரிமானம் செய்தல், சக்தியை சேமித்து தக்கவைத்தல் மற்றும் உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்றுதல் போன்ற செயல்களை செய்வதால் மிக முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. கடுமையான ஹெபடைடிஸ் 6 வாரங்கள் வரை நீடித்திருக்கும், ஆனால் நாட்பட்ட கல்லீரல் அழற்சி வாழ்நாள் முழுவதும் நீடிக்குக்கூடியது. ஹெபடைடிஸில் நிறைய வகைகள உள்ளன, அவை பின்வருமாறு:
- ஹெபடைடிஸ் ஏ.
- ஹெபடைடிஸ் பி.
- ஹெபடைடிஸ் சி.
- ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ்.
- ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஹெபடைடிஸின் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
- தசை வலி.
- மூட்டுகளில் ஏற்படும் வலி (மேலும் படிக்க: மூட்டு வலிகளுக்கான சிகிச்சை).
- காய்ச்சல்.
- தலைவலி.
- நாள்பட்ட சோர்வு.
- மஞ்சகாமாலை.
- மன அழுத்தம்.
- அசௌக்கியமாகவும் மந்தமாகவும் உணர்தல்.
- பசியின்மை.
- அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி.
- குமட்டல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
மரபணு தொற்றிலிருந்து வைரல் நோய்த்தொற்று வரை ஹெபடைடிஸ் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
- வைரல் நோய்த்தொற்றுடன் ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி அல்லது இ வைரஸ்கள்.
- மது அருந்துவது.
- மரபணு அல்லது சுற்றுசூழல் காரணங்களால் ஏற்படும் ஆட்டோ இம்யூன் நோய்கள்.
- கல்லீரலில் திரண்டிருக்கும் அதிகப்படியான கொழுப்பு காரணமாக ஏற்படும் மது அல்லாத ஸ்டெதோஹெபடைடிஸ் போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள்.
- வலி நிவாரணிகள் மற்றும் காய்ச்சலை குறைக்கும் மருந்துகளை அதிகப்படியாக உட்கொள்தல்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
இரத்த பரிசோதனைகள் மற்றும் கல்லீரல் திசுப் பரிசோதனை (கல்லீரலிலிருந்து எடுக்கப்படும் திசுக்களின் மாதிரியை வைத்து மதிப்பாய்வு செய்தல்) மூலமாக ஹெபடைடிஸ் நோயை கண்டறியலாம். இரத்தத்தில் உள்ள ஆண்டிபாடிகளை கண்டறிவதற்கு மற்ற பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு வகையான ஹெபடைடிஸ் நோய்க்கும் குறிப்பிட்ட முறையில் இரத்த பரிசோதனை செய்யப்படவேண்டும்.
படுக்கை ஓய்வு மற்றும் சரியான மருந்துகள் உட்கொள்வதன் மூலமாக கடுமையான ஹெபடைடிஸை குணப்படுத்த முடியும். மது மற்றும் அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலம் இந்நிலைக்கான அறிகுறிகளை வேகமாக குறைக்க முடியும். தீவிரமான நிலைகளில், கல்லீரலில் ஏற்படும் அதிக சேதத்தால் கல்லீரல் இழைநார் அழற்சி அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படக்கூடும், இத்தகைய நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது வைரல் ஹெபடைடிஸ் பி, சி ஆகிய நோய்கள் தொற்றினால் பாதிக்கப்பட்ட உடலில் சுரக்கும் திரவங்களின் தொடர்பு மூலம் பரவுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட நபர்களுடைய தனிப்பட்ட பொருட்களை உபயோகப்படுத்துதலை தவிர்த்தல் நன்று (பல் துலக்கி, ரேசர், மற்றும் பல). பாலியல் தொடர்பு (வெஜினல் திரவம் அல்லது விந்து திரவத்துடன் ஏற்படும் தொடர்பு) கூட வைரஸ்களை பரிமாற்றம் செய்யும், ஆகையால் இவ்வாறு இந்நோய் தொற்றுகள் பரவுதலை தவிர்க்க காண்டம்ஸ் பயன்படுத்துவது மிக அவசியம்.
ஹெபடைடிஸ் பி க்கான தடுப்பூசிகள் கிடைக்கின்றன மற்றும் நம் நாட்டில் ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போடுதல் அவசியம். ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியும் மிக அவசியமானது.