நகச்சொத்தை என்றால் என்ன?
நகச்சொத்தையென்பது கைவிரலில் அல்லது கால்விரலில் பொதுவாகக் காணப்படும் ஒரு பூஞ்சை நோய்த்தொற்று ஆகும்.இது விரலின் நுனியில் தொடங்கி பின்னர் மையத்திற்கு பரவுகிறது.இது நகத்தின் நிறச் சிதைவு அல்லது நிற மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.இது தீவிரமான நிலை இல்லை என்றாலும், குணமடைய பல நாட்கள் ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நகச்சொத்தை பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தும்:
- நகத்தைச் சுற்றி வலி.
- நகத்தைச் சுற்றி வீக்கம்.
- நகத்தின் வடிவத்தில் மாற்றம்.
- நகம் தடித்து கரடுமுரடாகத் தோன்றுதல்.
- நகத்தில் நிற மாற்றம்.
- எளிதில் உடையக்கூடிய நகங்கள்.
- நகத்தினடியில் அழுக்குகள் சேருதல்.
- நகத்தின் நுனி உடைதல்.
- நகம் பளபளப்பின்றி பால்போல் வெளுத்துக் காணப்படும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கைவிரல் நகச்சொத்தையை விட கால் விரல் நகச்சொத்தை மிகவும் பொதுவானதாகும்.பின்வரும் நிலைகள் நகத்தில் பூஞ்சை நோய்த் தோற்று ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றன:
- நகம் அல்லது தோலில் ஏற்படும் சிறு காயங்கள்.
- நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு.
- நகங்களின் சிதைவு.
- நகம் சார்ந்த கோளாறுகள்.
- நகங்களுக்கு காற்றோட்டம் சரிவர செல்லாமல் தடுக்கக்கூடிய காலணிகளை பயன்படுத்துதல்.
- நீண்ட நேரம் தோல் ஈரப்பதத்துடன் இருத்தல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பின்வரும் சோதனைகளின் மூலம் மருத்துவர் நகச்சொத்தையைக் கண்டறிவார்:
- நகத்தைச் சோதனை செய்தல்.
- நகத்தைத் உரசி தேய்த்து, அதன் திசுவை நுண்ணோக்கி மூலம் சோதனை செய்தல்.
சிகிச்சை:
மருந்தகங்களில் மருத்துவ குறிப்பின்றி வாங்கும் களிம்புகள் அல்லது மேற்பூச்சு மருந்துகளால் இச்சொத்தையைக் குணப்படுத்த முடியாது.பின்வரும் சிகிச்சை முறைகள் நகச்சொத்தையை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்:
- வாய்வழி எதிர்ப் பூஞ்சை மருந்துகள் - விரல் நகங்களைக் காட்டிலும் கால் விரல்களுக்கு நீண்ட காலம் சிகிச்சையளிக்கப்டுகிறது.
- பூஞ்சையைக் கொல்வதற்கு லேசர் சிகிச்சைகள் உதவுகின்றன.
- சில நேரங்களில், நகச்சொத்தையைச் சரிசெய்ய ஒரே வழி நகத்தை அகற்றுதலே ஆகும்.
நகச்சொத்தைக்கு சிகிச்சையளிக்க நீண்ட காலம் எடுக்கும், எனவே, நகச்சொத்தை வராமல் தடுப்பதே நல்லதாகும்.
நகச்சொத்தை வராமல் தடுக்க பின்வருவனவற்றை மேற்கொள்ளலாம்:
- எப்போதும் உங்கள் நகங்கள் மற்றும் நகங்களைச் சுற்றியுள்ள தோலைச் சுத்தமாக மற்றும் ஈரப்பதமின்றி (உலர) வைத்தல் வேண்டும்.
- உங்கள் அல்லது பிறரின் பூஞ்சை நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட இடத்தை தொட்ட பிறகு நன்றாகக் கழுவுதல் வேண்டும்.
- கை நகங்கள் மற்றும் கால் நகங்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் கருவிகளை மற்றவரிடம் பகிர்தல் கூடாது .
- உங்கள் நகங்கள் மற்றும் தோலை நன்றாக பராமரிக்க வேண்டும்.