நியூட்ரோபீனியா என்றால் என்ன?
ரத்தத்தில் நியூட்ரோபில் குறைந்த அளவு இருந்தால் அது நியூட்ரோபீனியா எனப்படுகிறது. நியூட்ரோபில் என்பது எலும்பு மஜ்ஜையில் உருவாகும் வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகையாகும். இது கிருமிகளை அழிப்பதின் மூலம் உங்கள் உடலை நோய்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. நியூட்ரோபில் அளவு இரத்தத்தில் ஒரு மைக்ரோலிட்டருக்கு 1500 -க்கும் குறைவாக இருந்தால், நீங்கள் நியூட்ரோபீனிக் என்று கூறப்படுவீர்கள்.
பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு காரணமாக நியூட்ரோபில் அணுக்குறைபாடு உடையவர்கள் நோய்த்தொற்று உருவாவதற்கான அதிகரித்த ஆபத்தில் உள்ளனர்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
நியூட்ரோபீனியாவுடன் தொடர்புடைய குறிப்பிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. தொற்று ஏற்படும் போது இது பொதுவாக கண்டறியப்படுகிறது. நோய்த்தொற்றுகளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- சோர்வு.
- அதிகமான காய்ச்சல்.
- குளிர்.
- அடிவயிற்றில் வலி.
- பேதி.
- வேனற்கட்டி.
- இருமல், சுவாசிப்பதில் சிரமம்.
- தொண்டைப் புண்கள்.
- சிறுநீர் கழிக்கும் போது வலி.
- ஒரு திறந்த காயம், அதனைச் சுற்றி சிவத்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
புற்றுநோய் சிகிச்சை நியூட்ரோபீனியாவின் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். கீமோதெரபி (மருந்துகளுடன்), கதிர்வீச்சு சிகிச்சை (கதிர்வீச்சுடன்) மற்றும் பயோதெரபி (உயிரினங்களிலிருந்து பெறப்பட்ட பொருட்களுடன்) ஆகியவை இதில் அடங்கும். சாதாரண உடல் அணுக்கள் மற்றும் புற்றுநோய் அணுக்களுக்கு வேறுபாடு தெரியாததால், இந்த சிகிச்சைகள் வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் அணுக்களோடு சாதாரண அணுக்களையும் அழிக்கின்றன.பிற காரணங்கள் பின்வருமாறு:
- பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று.
- ஏப்லாஸ்டிக் அனீமியா (சிவப்பணு வளர்ச்சியற்ற சோகை) போன்ற எலும்பு மஜ்ஜை கோளாறுகள்.
- லிம்போமா மற்றும் லுகேமியா போன்ற புற்றுநோய் கட்டிகள்.
- விரிவடைந்த மண்ணீரல்.
- தன்னெதிர்ப்பு நோய்களான முடக்கு வாதம், அதிதைராய்டியம் மற்றும் லூபஸ்.
- அதிதைராய்டிசத்திற்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள்.
- வைட்டமின் பி12 குறைபாடு.
- எச்.ஐ.வி தொற்று.
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
உங்கள் இரத்தத்தில் உள்ள நியூட்ரோபில்களின் அளவை மதிப்பிடுவதற்கு இரத்த பரிசோதனையை மருத்துவர் பரிந்துரைப்பார். நியூட்ரோபில் அணுக்குறைபாட்டின் காரணம் தெளிவாக தெரியவில்லை என்றால், எலும்பு மஜ்ஜையில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய எலும்பு மஜ்ஜை பரிசோதனையை மருத்துவர் பரிந்துரைப்பார்.
நியூட்ரோபில் அணுக்குறைபாட்டின் சிகிச்சையானது நோயின் காரணத்தை பொறுத்து வேறுபடுகிறது. நோய்த்தொற்று இருந்தால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. கீமோதெரபியின் போது, நியூட்ரோபில் எண்ணிக்கை வழக்கமாக முதல் 2 வாரங்களுக்குள் குறைந்து பின்னர் சாதாரணமாக 3 முதல் 4 வாரங்களில் சரியாகிறது. சாதாரண அளவுகளை அடைவதில் தோல்வி ஏற்பட்டால் வளர்ச்சி காரணிகளைக் கொண்டு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது. இது வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய எலும்பு மஜ்ஜையை தூண்டுகிறது. இது ஒரு விலையுயர்ந்த சிகிச்சையாதலால் இதை அடைவது கடினமாக உள்ளது.