மாலைக்கண் நோய் என்றால் என்ன?
மாலைக்கண் நோய் என்பது இரவில் அல்லது குறைந்த வெளிச்சத்தில், பார்வை குறைபாடு ஏற்படும் ஒரு நிலை. இது வைட்டமின் A குறைபாடு காரணமாக ஏற்படும் முதல் மருத்துவ அறிகுறியாகும் மற்றும் குறைந்த சீரம் ரெட்டினோல் அளவுகளை காட்டும் ஒரு வலுவான அறிகுறி.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
மங்கலான ஒளியில் பலவீனமான பார்வை, இரவில் வாகனம் ஓட்டும் போது சிரமம் மற்றும் மிதமான கண் அசௌகரியம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். இருளில் ஏற்படும் தவறான கண் தகவமைதல் இதன் ஆரம்ப அறிகுறிகளில் அடங்கும். இது குறைந்த சீரம் ரெட்டினோல் செறிவுகளாலும் (1.0 மைக்ரோமொல் / லிட்டர்க்கு கீழ்) மற்றும் பைடாட்'ஸ் ஸ்பாட் காரணமாகவும் ஏற்படுகிறது. வைட்டமின் A குறைபாடில் இந்த பைடாட்'ஸ் ஸ்பாட் குறிப்பாக காணப்படுகின்றன. இந்த பைடாட்'ஸ் ஸ்பாட் முக்கோண வடிவாக, உலர்ந்து, வெண்மை நிறமாக, நுரை போன்ற புண்களாக கண்களின் வெளிப்புறத்தில் தோன்றும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கண்களின் உள்ளே உள்ள வைட்டமின் A, ஓப்சின் என்று அழைக்கப்படும் ஒரு பொருளோடு இணைந்து தண்டுகளில் ஒளிஉணர்திறன் கொண்ட பார்வை நிறமி ரோடாப்ஸினை உற்பத்தி செய்கிறது. நம் கண்களில் இரண்டு வகையான ஒளி வாங்கிகள் உள்ளன, தண்டுகள் மற்றும் கூம்புகள். தண்டுகள் குறைந்த வெளிச்ச பார்வைக்கு உதவுகின்றன, ஆனால் அவை வண்ணப் பார்வைக்கு உதவுவதில்லை. கூம்புகள் பிரகாசமான ஒளியில் மட்டுமே செயல்படுகின்றன மற்றும் அவை நமக்கு வண்ணப் பார்வை கொடுக்கின்றன. ரோடாப்ஸின் அளவு குறைவதால் தண்டுகள் மற்றும் கூம்புகளின் செயல்பாடு முடங்கிவிடுகிறது, இதுவே மாலைக்கண் நோயாக வெளிப்படுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வைட்டமின் ஏ குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உள்ளீர்ப்புக் குறைபாடு காரணமாக பரவலாக உள்ளது. ரெடினிடிஸ் பிக்மெண்டோஸா என்பது இதேபோன்ற ஒரு நிலை, ஆனால் வைட்டமின் A குறைபாட்டால் இது ஏற்படுவதில்லை. மரபணுக்களில் ஏற்படும் ஒரு தவறுதலால் உண்டாகும் இந்த நிலை மரபுவழி மாலைக்கண் நோயின் ஒரு வடிவம் ஆகும்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் மருத்துவ வரலாறு மாலைக்கண் நோயை கண்டறிய உதவுகிறது, அதை மேலும் உறுதிசெய்ய குறைந்த சீரம் வைட்டமின் ஏ நிலைகள், பைடாட்'ஸ் ஸ்பாட் இருப்பு, அசாதாரண எலெக்ட்ரோரெடினோகிராஃபி சோதனை ஆகியவை உபயோகிக்கப்படுகின்றன.
குறைபாட்டை முற்றிலும் சிகிச்சை அளிக்க, 2,00,000 IU வைட்டமின் A வாய்வழியாக, 3 நாட்களுக்கு தினமும் கொடுக்கப்படுகிறது, இதனை தொடர்ந்து 50,000 IU வைட்டமின் A 14 நாட்களுக்கு கொடுக்கப்படலாம் அல்லது 1-4 வாரங்களுக்குப் பிறகு ஒரு கூடுதல் மருந்தளவு கொடுக்கப்படலாம். வைட்டமின் ஏ வின் முக்கிய உணவு ஆதாரங்கள் அரைக்கீரை, கேரட், குடைமிளகாய், சிட்ரஸ் பழங்கள், பப்பாளி, மாம்பழங்கள் மற்றும் பிற சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகும். முட்டை மற்றும் வெண்ணெய் போன்ற விலங்கு ஆதாரங்களிலும், வைட்டமின் ஏ நிறைய உள்ளது. வாய்வழி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு, தசைவழியாக வைட்டமின் ஏ கொடுக்கப்படுகிறது. வைட்டமின் ஏ குறைபாடு உள்பரவிய நோயாதலால், கண் சொட்டு மருந்துகள் எந்த நன்மையையும் காட்டுவதில்லை.