அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு என்றால் என்ன?
அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (பி.டி.எஸ்.டி) என்பது தங்கள் வாழ்க்கையில் சில பாலியல் வன்முறை, போர் நடவடிக்கை, சாலை விபத்துகள் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிற நிகழ்வுகள் போன்றவைக்குப் உட்பட்ட பிறகு உண்டாகும் ஒரு மனநிலை (உளவியல்) சார்ந்த பாதிப்பு ஆகும். இது மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி, அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. இதனோடு மனச்சோர்வு அல்லது பீதி தாக்குதல் போன்ற பிற மன கோளாறுகள் இணைந்து காணப்படலாம். மோசமான நிலையில், பி.டி.எஸ்.டி தற்கொலையை தூண்டக்கூடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இது தொடர்ச்சியான உளவியல் ரீதியான தாக்கங்களுடன் கூடிய ஒரு மனநிலை கோளாறாகும். இதனோடு தொடர்புடைய சில அறிகுறிகள் பின்வருமாறு:
- இறுக்கமான நிகழ்வுகளை அனுபவித்தல் அல்லது பார்த்தல்.
- மனதை பாதித்த கனவுகள் மற்றும் (அல்லது) ஃப்ளாஷ்பேக்குகள் உள்ளிட்ட நினைவுகளை மீண்டும் அனுபவித்தல்.
- பெரும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை நினைவூட்டும் சூழ்நிலைகள், இடங்கள் மற்றும் மக்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள், ஏனெனில் இது அன்றாட வாழ்க்கை செயல்பாட்டிற்கு இடையூறாக இருக்கக்கூடும்.
- எரிச்சலூட்டும் தன்மை, செறிவு சிக்கல்கள் மற்றும் தூக்க தொந்தரவுகள் போன்ற அதிகப்படியான உளவியல் சார்ந்த அறிகுறிகள்.
பிறர் கொல்லப்படுதல்/காயமடைதல், உயிருக்கு ஆபத்தான விபத்தில் சிக்கிக்கொள்ளுதல், நெருங்கிய தொடர்புடைய வன்முறையை எதிர்கொள்ளுதல், பாலியல் வன்முறைக்கு உட்படுதல், இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளுதல், ஆயுதம் கொண்டு அச்சறுத்தப்படுத்தல் போன்ற பல காரணங்களால் இந்நிலை ஏற்படக்கூடும். ஆனால், ஒருவர் எதிர்கொள்ளும் சம்பவம் நபருக்கு நபர் மாறுபடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பயங்கரவாத நடவடிக்கைகள், வன்முறை மற்றும் தவறான முறையில் நடத்தல், இராணுவப் போர், இயற்கை பேரழிவுகள், கடுமையான விபத்துகள் அல்லது வன்முறையான தனிநபர் தாக்குதல்கள், போன்றவை நிகழும் இக்காலத்தில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஏற்படுவது அசாதாரணமானது அல்ல. நம்மில் பலர் இத்தகைய இறுக்கமான சம்பவங்களை எதிர்கொள்ளும்/பார்க்கும் போது ஆழமாக பாதிக்கப்படுகிறோம், ஆனால் சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு பிறகு சோகத்தை மறந்து வழக்கமான வாழ்க்கையை தொடரவும் முடிகிறது.
அதிர்ச்சிகரமான நிகழ்வின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு நம் உடல் வித்தியாசமாக பதில் அளிக்கிறது. பொதுவாக, மன அழுத்தத்தை சமாளிக்கும் வகையில் ஒரு திசையில் மக்கள் வேலை புரிகின்றனர். எனினும், சிலர் 'முயற்சிகளை' கைவிட்டு, தங்கள் உணர்ச்சி அல்லது பயத்தை அடக்கிக் கொள்கிறார்கள். இதுவே பி.டி.எஸ்.டி-க்கு வழிவகுக்கக்கூடும்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
குறிப்பிட்ட சுய-அறிக்கை அல்லது பயிற்சியாளர்-உதவியுடன் கேட்கப்படும் வினாப்பட்டியல்கள் மற்றும் அளவுக்கோல்களை மதிப்பீடு செய்வதன் மூலம் இந்நோய் கண்டறிதல் ஏற்படலாம். நோயாளியின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு இதனை மிகவும் உணர்ச்சிபூர்வமாக செய்ய வேண்டும். ஆலோசனை, அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சை, குழு சிகிச்சை, தளர்வு உத்திகள் மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மிகப்பெரிய ஆதரவு போன்றவற்றை இதற்கான சிகிச்சை உள்ளடக்குகிறது. நிலையின் தீவிரத்தைப் பொறுத்து, பெரும்பாலும் மனஅழுத்த நீக்கிகள் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.