கண் உலர் நோய் என்றால் என்ன?
கண் உலர் நோய்க்குறி, அல்லது கண் உலர் நோய் என்பது ஒரு நபர் தனது கண்களில் வறட்சி அல்லது எரிச்சல் போன்ற கோளாறுகளை உணரும் ஒரு பொதுவான நிலையாகும். இதற்கு காரணம் கண்களில் கண்ணீர் போதுமான அளவு உற்பத்தியாகாதது அல்லது வேகமாக ஆவியாவது போன்றவையாகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கண் உலர் நோய்க்கான அறிகுறிகள் மிதமானது அல்லது வலிமிகுந்தது என நோயின் தீவிரத்தை பொறுத்து வேறுபடலாம். சில அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- வறட்சி.
- வேதனை.
- அரிப்பு.
- எரிச்சலை ஏற்படுத்தும் உணர்வு.
- சிவத்தல்.
- தற்காலிமாக பார்வை தெளிவில்லாமல் இருப்பது, இந்த நிலை ஒருமுறை கண்களை சிமிட்டினால் சரியாகிவிடும்.
- வலி.
- கண்ணிலிருந்து நீர் வடிவது.
- கண்களுக்கு பின்னால் அழுத்தத்தை உணர்வது.
ஒருவேளை பாதிக்கப்பட்டவர் ஒரு வறட்சியான சூழ்நிலையில் இருந்தாலோ அல்லது அவரிருக்கும் சுற்றுப்புறம் மாசுபட்டிருந்தாலோ இந்த அறிகுறிகள் இன்னமும் மோசமடையக்கூடும். அது கண்களில் ஏற்படும் அரிப்பையும் அதிகரிக்கக்கூடும்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கண் உலர் நோய்க்கு முக்கிய காரணம் கண்ணீர் உற்பத்தியின் பற்றாக்குறை ஆகும். இது கண்கள் ஈரத்தன்மையை இழப்பதற்கு வழிவகுக்கிறது. கண் உலர் நோயின் மற்ற பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- தொடுவில்லைகள் அல்லது காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவது.
- உஷ்ணமான காலநிலை.
- அதிகமான காற்று வீசும் காலநிலை.
- கண்ணிமைகளில் கட்டி.
- ஆன்டிஹிஸ்டமின்கள், மனஅழுத்தம் தடுப்பிகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் சிறுநீர்ப்போக்குத் தூண்டிகள் போன்ற மருந்துகளின் பயன்பாடு.
- மாதவிலக்கு நிற்பது (இறுதி மாதவிடாய்) மற்றும் கருத்தரிப்பது போன்ற உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
கண் உலர் நோய் ஏற்படுவதற்கான அபாயம் வயது ஏற ஏற அதிகரித்துக்கொண்டே போகிறது மற்றும் இதன் அறிகுறிகள் ஆண்களை விட பெண்களிடம் மிகப்பொதுவாக காணப்படுகிறது.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
ஒரு மருத்துவரால் செய்யப்படும் உடல் பரிசோதனை கண் உலர் நோயை கண்டறிய உதவுகிறது. சோதனைகள் பொதுவாக தேவைப்படுவதில்லை.
தூசும் புகையும் உள்ள சூழ்நிலைகளை தவிர்ப்பதன் மூலம் கண்கள் வறண்டுவிடுவதை தடுக்கலாம் மற்றும் வெயிலில் செல்லும்போது கண் கண்ணாடிகள் அணிவதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம். கண் உலர் நோயின் சிகிச்சை அறிகுறிகளை பொறுத்து வேறுபடும். உடனடி நிவாரணத்திற்காக மருத்துவர் கீழ்கண்டவற்றை பரிந்துரைக்கலாம்:
- கண்களில் விடும் சொட்டு மருந்துகள்.
- கண்களின் வறட்சியை நீக்கி மென்மையாக்குவதற்கான களிம்புகள்.
- கண்களில் உள்ள கட்டியை குறைப்பதற்கான மருந்துகள்.
மருத்துவர் உணவுமுறையிலும் மாற்றங்களை பரிந்துரைக்கலாம், உதாரணமாக கண்களின் வறட்சியை நீக்கி எப்போதும் மென்மையாக வைப்பதற்காக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுமாறு கூறலாம்.